கவிஞர் ஜெ.ரோஸ்லின் கவிதைகள்
இந்தத் தேநீர் குவளையை நீங்கள் பார்த்திருக்ககூடும்
உடைந்த காதலின் சில்லுகளை
பசையால் ஒட்டியபிறகு
உண்டானது ஒரு விநோதமான தேநீர் குவளை.
பிறகு பயன்பாட்டிலிருந்து
விலக்கிவைக்கப்பட்டு
மெதுமெதுவாக
மெளனத்தின் இருட்டுக்குள் மூழ்கியது
ஒரு நகரம் கடலுக்கடியில் மறைவது போல.
காலப்போக்கில்
இதயத்தின் சமையலறையிலிருந்து
விரிசலின் கண்களால்
நம்மைப் பார்க்க கற்றுக்கொண்டது
ஆனால் நாம் ஒவ்வொருவரும்
இன்னமும் பூமியில்
வாழ்ந்துகொண்டிருப்பதாக
தன்னைத்தானே நம்பவைத்துக்கொள்ளும்
ஒரு வேலையில்
இரவுபகலாக உழைத்துக்கொண்டிருந்தோம்.
2
என் இனிய தேய்வழக்கே
அது ஒரு மழைநாள்.
குடைக்குள் நின்றுகொண்டிருந்தேன்.
எங்கிருந்தோ ஒரு வண்ணத்துப்பூச்சி வந்தது.
குடையில் என்னுடன் ஒரிரு நொடிகள் நின்று
பின்பு பறந்து சென்றது.
என் இனிய தேய்வழக்கே
இந்த மழையில் மட்டுமல்ல
காலத்தின் கூர் மழையிலும்
நனையாதிருக்கும் இடமெல்லாம் கூட
உனக்குத் தெரியும் போலிருக்கிறதே?
இரு, என்னையும்
அழைத்துச்செல்லேன்.
நானும் உன்னுடனேயே வந்துவிடுகிறேனே?
3
நீல வெளிச்சம்
மாலைப்பொழுதில் அறையை
ஒழுங்கு செய்த களைப்பில்
இன்று அவளது கணவனும் கூட
சீக்கிரம் தூங்கிவிட்டான்.
அவளுக்குத் தூக்கம் வரவில்லை.
தொலைக்காட்சியில் அட்டன்பரோவின்
ஆவணப்படம் போல ஏதோவொன்று.
கழுதைப்புலிகள் மானை
சாப்பிட்டுக்கொண்டிருந்தன.
எழுந்து சென்று
குளிர்பதனப் பெட்டியைத் திறந்து
தண்ணீர் அருந்தினாள்.
சிந்திய துளிகளைத் துடைத்துக்கொண்டாள்.
மறுபடியும் கழுதைப்புலிகளுக்குத்
திரும்பினாள்.
பால்கனியில் நாளைக்கான உடைகள்
மழைச்சாரலில் நனைந்துகொண்டிருந்தன.
4
இன்னமும்
நின்றுகொண்டிருக்கும்
பட்டுப்போன மரங்களுக்கு
இந்தப் பூமியில் என்ன வேலை?
பிரார்த்தனை செய்யும் வேலை!.
Comments
Post a Comment