கவிஞர் பெரு.விஷ்ணுகுமாரின் கவிதைகள்
1
எடிசன் புன்னகைக்கிறார்
நள்ளென் யாமத்தில் உறக்கம்கலைந்து தட்டுத்தடுமாறி
சுவரில் கைவைத்துத் தடவியபடி
அறையின் விளக்கை எரியவைக்க முயற்சிப்பவனிடம்
அந்தரத்தில் தொங்கும் ஒளிக்கூடையானது
அந்த நேரத்தில்போய்
சரி தவறு என்றெல்லாம் கணக்கு பார்ப்பதில்லை
இதுபோலான இக்கட்டான சூழ்நிலையிலெல்லாம்
போனால் போகட்டுமென
தவறான சுவிட்ச்சுக்கும் ஒளிர்ந்துவிடும்
அதுதான்
தாட்சண்யம் மிக்கதோர் விளக்கு
2
மே-சொல்லிகள்
பாதையை மறித்தபடி மந்தமாகச் செல்லும்
மே-சொல்லிகள்
தாமாகவே விலகி வழிவிடட்டும் எனக் காத்திருந்தேன்.
அதற்குள் அவை என்னையும்
தங்களில் ஒருவராக நினைத்துக்கொண்டன போலும்.
சரிதான்….
எல்லாவற்றுக்கும் மே-சொல்வதென்பது
எளிமையானது மட்டுமல்ல
சௌகரியமானதும்கூட
எல்லா பொதிகளையும் ஒரே வண்டியில் ஏற்றலாம்.
எல்லா பூக்களுக்கும் ஒரே வண்ணமிடலாம்
யாராவது வந்து மீட்டெடுக்கும்வரை
வழிமொழியப் பழகாதொரு பள்ளத்தாக்கினை
செப்பனிட்டுக் கொண்டிருக்கலாம்.
இப்போது
மொத்த கூட்டமும் வலப்புறம் திரும்புகிறது
எதையும் கண்டுகொள்ளாமல் நிற்கும் நான்
அங்கிருந்து நழுவி நேராகச் செல்கிறேன்
எந்தவித சலனமுமில்லை மேய்ப்பனிடம்
கண்ணெதிரிலே தன் மந்தையில் ஒன்று
தொலைவதைக் கண்ட பின்பும்.
3
மீள
அவ்வளவு சிரமத்தோடெல்லாம்
இங்கிருந்து நிரந்தரமாய்
எனைவிட்டுப் பிரிய வேண்டாம்
ஆற்றில் பயணிக்கும்
ஆளற்ற படகே
விருப்பமில்லையெனில் திரும்ப வந்துவிடு
உன்னால் முடியும் என்றால் . . .
4
வழியனுப்பும் கலை
வழியனுப்பும் உனக்குக் கையசைக்கும் நான்
காற்றில் வரைகிறேன் ஒழுங்கற்றதோர் அரைவட்டத்தை
“பத்திரமாகப் போய் வா…
அவ்வப்போது எனைக் கொஞ்சம் நினைத்துக் கொள்”……
பதிலுக்கு நீயும் புன்முறுவலுடன் கையசைக்கிறாய்
நான் வரைந்து வைத்ததை அழிக்கும் தோரணையில்.
இதே வேலைதான் உனக்கு.
உன்னால் தற்சமயம் பார்த்த காட்சிகள் அனைத்தையும்
மறந்து நிற்கிறது ஒரு தூசி படர்ந்த ஆடி.
பிறகு சிரமம்கொண்டுதான் அதில்
ஒவ்வொன்றாகத் தேடியெடுக்க வேண்டியிருந்தது.
அண்மைக்கும் பிரிவுக்கும் ஊசலாடும் கண்களை,
எந்த சூழலையும் சமாளிக்கத் தகுந்த சிரிப்பினை,
இவை எல்லாவற்றையும் சேர்த்து
உத்தேசமாகத் தொகுத்துக்கொண்டவொரு முகத்தினை.
இப்போது மீண்டும் வழியனுப்புகிறேனா
அல்லது
பனி சூழ்ந்தக் கண்ணாடியைச் சுத்தம் செய்கிறேனா
இல்லை
ஆபத்தில் என்னை நானே
உதவிக்கு அழைத்துக்கொண்டிருக்கிறேன்
5
ஜென் குளம்
தவளையொன்று நீரில் குதித்தது
பின்வந்த தவளை
ஒரு ப்ளக் என்ற சத்தத்தில் குதித்தது
அடுத்து வந்த தவளை
ஒரு தளும்பும் வட்டத்தில் குதித்தது
அதற்கடுத்த தவளையோ
நீரைத் திறந்துமூடும் மையத்தில் குதித்தது
இலக்கற்று துவங்கிய பயணம்
அலையலையாய் விரிந்தபடி
எங்கெங்கோ சென்றாலும்
எல்லாம் ஓரெல்லைவரைதான்
ஓரெல்லைவரைதான்
சற்றுநேரத்தில் மீண்டும் குளமெங்கும்
நிச்சலனம்.
பாருங்களேன்,
இவ்வளவு நடக்கின்றன
ஆனால் எந்தவித தடயங்களுமில்லை
Comments
Post a Comment